ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரம்

ஈரோடு, ஏப். 22: ஈரோடு ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 72 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகள் உள்ளது. ஏற்கனவே உள்ள பழைய ஈரோடு நகராட்சி மற்றும் சூரம்பட்டி, காசிபாளையம், பெரியசேமூர், வீரப்பன்சத்திரம் ஆகிய நகராட்சி பகுதி மக்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து 9 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் எடுத்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் முறையாக குடிநீர் வழங்கப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் கோடைக்காலம் வந்து விட்டால் குடிநீருக்கு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தற்போது மாநகராட்சி பகுதி விரிவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து பகுதி மக்களுக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அங்கேயே சுத்திகரிப்பு செய்து ஈரோடு மாநகராட்சி பகுதிகளுக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்காக வரதநல்லூர் என்ற இடத்தில் ராட்ச சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு ஏர்லேட்டர், அழுக்கு நீக்க தொட்டி, 38 பில்டர் பெட் மற்றும் 52 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது. மேலும் சூரியம்பாளையத்தில் 42 லட்சம் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி, வ.உ.சி.பூங்காவில் ஒரு கோடியே 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்ச குடிநீர் தொட்டிகள் கட்டும் பணியும் நடந்து வருகிறது. மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் புதியதாக 21 மேல்நிலை குடிநீர் தொட்டிகளும், 46 பழைய குடிநீர் தொட்டிகளும் உள்ளது. பழைய குடிநீர் தொட்டிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பவானி அருகே ஊராட்சிக்கோட்டையில் இருந்து ஈரோட்டிற்கு தண்ணீர் கொண்டு வருவதற்காக ரோட்டோர பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டு ராட்சத குழாய்களும் பதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது மாநகராட்சி பகுதிகளில் 80 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. இந்த குடிநீர் திட்டத்தின் மூலமாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. 21 குடிநீர் தொட்டிகள் கட்டும் பணியில் இதுவரை 8 குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. தெரு குழாய் மற்றும் வீட்டு குழாய் இணைப்புகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதுவரை ஊராட்சிக்கோட்டை திட்டப்பணிகள் 72 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப குடிநீர் வழங்க புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதி மக்களுக்கு தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.484.45 கோடி மதிப்பீட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின்படி தினசரி நபர் ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: