ஈரோட்டில் மழையால் சாலைகளில் திடீர் பள்ளம்

ஈரோடு, ஏப். 22: ஈரோட்டில் பெய்த மழையால் சாலைகளில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டி செல்கின்றனர். ஈரோட்டில் நேற்று நள்ளிரவு 2வது நாளாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட பணிகள், பாதாள கேபிள் பொருத்தும் பணிகளுக்காக தோண்டப்பட்டு மூடப்பட்ட சாலைகளில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகைக்காக ஈரோடு காந்திஜி ரோட்டில் போடப்பட்ட தற்காலிக (பேட்ச்) சாலைகளில் நேற்று காலை சுமார் 5க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டது.

இதில் சாலையின் நடுவே சுமார் 10 அடி நீளத்திற்கும், சுமார் 2அடி ஆழத்திலும் இந்த பள்ளங்கள் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அப்பகுதியில் பேரிகார்டுகளை வைத்து, வாகனங்கள் ஒரு புறமாக செல்ல வழி செய்தனர். பின்னர் மதியம் 12 மணிக்கு மேல் பள்ளம் ஏற்பட்ட சாலைகள் மீண்டும் சீரமைக்கும் பணிகள் (தற்காலிகமாக) துவங்கியது. இதேபோல், ஈரோடு கந்தசாமி வீதியில் வடமாநிலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் குடோனாக பயன்படுத்தி வந்த பழங்கால வீட்டின் மேற்கூரை மற்றும் சிலாப்புகள் மழைக்கு இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது.  மேலும் ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியில் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, மழை நீர், கழிவு நீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: