கழிப்பிட பராமரிப்பு பணி மந்தம்

ஈரோடு, ஏப். 22:ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள கழிப்பிடம் பராமரிக்கும் பணிகள் மந்த நிலையில் நடந்து வருகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கனிமார்க்கெட், ஜவுளிகடைகள், சாலையோர கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பன்னீர்செல்வம் பார்க் பகுதிக்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்ககாக பன்னீர்செல்வம் பார்க் காந்திஜி ரோட்டில் மாநகராட்சி சார்பில் கட்டண கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனநிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இந்த கழிப்பறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேலும் கட்டிடம் வலுவிழந்த நிலையில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து கழிப்பிடத்திற்கு பூட்டு போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கழிப்பறையை பராமரிப்பு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கழிப்பறையின் பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. பணிகள் தொடங்கப்பட்டு ஒரு மாதத்தில் திறக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டது. அதன்படி கழிப்பறையில் இடிந்து விழுந்த மேற்கூரை பராமரிக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் இதற்கான பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதால், 4 மாதங்கள் ஆகியும் இதுவரை பணி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கழிப்பறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இந்த பணிகளை விரைந்து முடித்து கழிப்பறையை திறக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: