தஞ்சை வாக்கு எண்ணும் மையத்தில் குடிநீரின்றி தவிக்கும் புகைப்படத்தை அனுப்பிய போலீசாரின் செல்போன் பறிமுதல்

ஒரத்தநாடு,  ஏப். 22: தஞ்சையில் மக்களவை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார், குடிநீரின்றி தவிக்கும் புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பினர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரின் செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.தஞ்சை மக்களவை தேர்தல் முடிந்ததையொட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,  குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் 3 சுற்றுகளாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். 25 போலீசார் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த 19ம் தேதி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கு கல்லூரி வளாகத்தில் குடிநீர் வைக்கவில்லை. இதனால் உணவும் உண்ண முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த பல போலீசார், குடிநீர் இல்லாததால் அவதிப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பார்வையிட வந்த உயர் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், நிருபர்களுக்கு குடிநீரின்றி தவிக்கும் அவலத்தை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அண்ணாதுரையிடம் கேட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரின் நிலைமை குறித்து அறிந்தேன். போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்கப்பட்டு பிரச்னை தீர்க்கப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் குடிநீரின்றி அவதிப்பட்ட செய்தியை வாட்ஸ் அப்பில் அனுப்பியது யார் என்று விசாரிக்க பாதுகாப்பு பணி ஆய்வாளர் செந்தில், அனைத்து போலீசாரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலமும் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

Related Stories: