பாலகிருஷ்ணாபுரம் மக்கள் பீதி காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கிய டீச்சரிடம் செயின் பறிப்பு ராணுவ வீரர் வீட்டில் பீரோ உடைப்பு

திண்டுக்கல், ஏப்.22:  திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியையிடம் மர்மநபர்கள் ஏழரை பவுன் செயினை பறித்துச் சென்றனர். ராணுவ வீரர் வீட்டில் பீரோவை உடைத்து திருட முயன்றனர். இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகரை சேர்ந்த பேட்டரிக் மனைவி அமலா(40). அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு காற்று வாங்குவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது இவரின் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்த திருடன், இவர் கழுத்தில் கிடந்த ஏழரை பவுன் தங்க செயினை பறித்து சென்றார். இவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவரது கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அவர் தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம்  நடந்த 3வது வீட்டில் வசிப்பவர் ஆரோக்கிய செல்வம்(60). இவர் முன்னாள் ராணுவவீரர். வெளியூர் சென்றிருந்தார். அப்போது இவரது வீட்டில் திருட முயற்சித்து கதவு, பீரோவை உடைத்துள்ளனர். அதில் ஒன்றும் இல்லாததால் திரும்பி சென்றுவிட்டனர். திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் தொடர்ந்து திருட்டுக்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இங்கு இரவு நேரத்தில் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். போலீசார் கூறுகையில், திருடர்கள் முன்னதாக ராணுவவீரர் வீட்டில் கைவரிசை காட்டிவிட்டு, பின்புதான் பெண்ணிடம் செயின் பறித்து சென்றுள்ளதாக தெரிகிறது. இந்த பகுதியில் அடிக்கடி உலா வருபவர்களாக இருக்க வேண்டும். விரைவில் பிடித்துவிடுவோம் என்றனர்.

Related Stories: