திருச்சியில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

திருச்சி, ஏப்.21:  திருச்சியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து  வசூலித்தனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று திருச்சி மாநகராட்சி  ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் முத்துராஜா, திருப்பதி மற்றும் சுகாதார பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திருச்சி பெரிய கடைவீதி, பேகம் பள்ளி வாசல்  அருகில் நரசிம்மலு நாயுடு தெரு பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது கோபால்ராம் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து குடோன் உரிமையாளர் கோபால்ராமுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து, கடையை மூடி சீல் வைக்க முடிவு செய்தனர். அப்போது கோபால்ராம் உடனடியாக ரூ.2 லட்சம் அபராதத்தை செலுத்தினார். இதனால் அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கையை  கைவிட்டனர். மேலும் அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை விற்ககூடாது என கடைஉரிமையாளருக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துச்சென்றனர். இச்சம்பவம் பெரிய கடைவீதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: