தஞ்சை திருஇருதய பேராலயத்தில் ஈஸ்டர் பெருவிழா வழிபாடு

தஞ்சை, ஏப்.21: ஈஸ்டர் பெருவிழாவை முன்னிட்டு தஞ்சை திருஇருதய பேராலயத்தில் நள்ளிரவு வழிபாடு நடைபெற்றது. ஈஸ்டர் திருவிழாவையொட்டி தஞ்சை பூக்காரத்தெரு திருஇருதய பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் பாஸ்கா திருவிழிப்புச் சடங்குகள் நடந்தது. முன்னதாக புதுநெருப்பு புனிதம் செய்யும் சடங்கு நடந்தது. தொடர்ந்து புதுநெருப்பிலிருந்து ஆயர் பாஸ்கா திரியை ஏற்று பவனியாக வர இறைமக்கள் அனைவரும் கையில் எரியும் மெழுவர்த்தியை ஏந்தியவாறு பாஸ்கா பாடல் பாடினர்.

பின்னர் இறைவாக்கு வழிபாடு, திருமுழுக்கு நீர் புனிதம் செய்யும் சடங்கு, மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்கு தந்தை இருதயராஜ் அடிகளார், உதவி தந்தை ரீகன் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பெருவிழா திருப்பலி முடிந்ததும் இயேசுவின் உயிர்த்த காட்சியை சித்தரிக்கும் நிகழ்ச்சி வியாகுல மாதா ஆலயத்தில் நடைபெற்றது. பின்னர் உயிர்த்த ஆண்டவர் சுரூபம் பவனியாக சென்று மீண்டும் பேராலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றது.

Related Stories: