திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம்பிடித்து ேதர் இழுத்தனர்

திருச்சி, ஏப்.19:  திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு சிவபெருமான் தாயாக வந்து பிரசவம் பார்த்த நிகழ்ச்சியும், 15ம் தேதி தாயுமானசுவாமிக்கும், மட்டுவார் குழலம்மைக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தாயுமானசுவாமி, மட்டுவார்குழலம்மை அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். காலை 4.55 முதல் 5.53 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: