கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை படகுகள் இன்றி வெறிச்சோடிய மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம்

சேதுபாவாசத்திரம், ஏப்.18:  கஜா புயலால் சேதமான விசைப்படகுகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்காததால் மல்லிப்பட்டினம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் தடைக்காலத்தில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் படகுகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் 188 விசைப்படகுகள் முற்றிலும் சேதடைந்தது. 54 படகுகள் பகுதி சேதமடைந்தன.
Advertising
Advertising

முழு சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சமும், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் அரசு நிவாரணம் அறிவித்தது. ஆனால் நிவாரண தொகை போதாது, இந்த தொகைக்கு பழய படகுகூட வாங்க இயலாது, எனவே நிவாரணத்தை உயர்த்தி 10 லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் மீனவர்கள பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தனர். மீனவர் போராட தயாரானவுடன் அரசு இரண்டு மாதங்களுக்கு முன் பகுதி சேதமடைந்த 54 படகுகளுக்கு ரூ.3 லட்சம் ரூபாயை மீனவர்கள் வங்கி கணக்கில் செலுத்தியது. இதேபோல் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் முழுமையாக சேதமடைந்த விசைப்படகுகளில் கடந்த மாதம் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் 54 படகுகளுக்கு ரூ.5 லட்சம் ரூபாயை வழங்கியது.

5 மாதங்களை கடந்தும் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த 134 படகுகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மட்டும் குறைந்த அளவு படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவந்தன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் மீன் இனப்பெருக்க காலம் என கூறி விசைப்படகுகளுக்கு தடைக்காலம் தொடங்கியுள்ளது. இதனால் துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்படும் படகுகள் இல்லாமல் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுவது பரிதாபமாக உள்ளது. நிவாரணத்தை உடனடியாக வழங்கி இருந்தால் படகுகளை தயார் செய்து கடலுக்கு தொழிலுக்கு சென்றிருப்போம் அரசின் மெத்தனபோக்கால் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது என மீனவர்கள் கவலையோடு கூறுகின்றனர்.

Related Stories: