தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வழங்கிய அடையாள சீட்டில் வாக்குப்பதிவு நேரத்தில் குளறுபடி வாக்காளர்கள் குழப்பம்

தஞ்சை, ஏப்.18: தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. ஆனால் எந்த நேரத்தில் வாக்குப்பதிவு துவங்கி எப்போது முடிகிறது என்பது தெரியாமல் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். 17வது மக்களவைக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 2ம் கட்டமாக தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் 6 பேர் அரசியல் கட்சி சார்பிலும், சுயேட்சைகள் 6 பேர் என மொத்தம் 12 பேர் போட்டியிடுகின்றனர். இதேபோல் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில் 7,10,968 ஆண் வாக்காளர்களும், 7,49,201 பெண் வாக்காளர்களும், 97 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 14,60,266 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெறும் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் 1,33,262 ஆண் வாக்காளர்களும், 1,43,955 பெண் வாக்காளர்களும், 52 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,77,269 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 2290 வாக்குச்சாவடிகளில் 11,781 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்குப்பதிவு உபகரணங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று படிப்படியாக கொண்டு செல்லப்பட்டன. தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் திருவையாறு தொகுதியில் 307, தஞ்சை தொகுதியில் 286, ஒரத்தநாடு தொகுதியில் 285, பட்டுக்கோட்டை தொகுதியில் 271, பேராவூரணி தொகுதியில் 260, மன்னார்குடி தொகுதியில் 282 என மொத்தம் 1691 வாக்குச்சாவடிகள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 5722 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3662 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் 4005 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளது.

தஞ்சை சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் 2 வாக்குகள் பதிவு செய்ய உள்ளனர். நாடாளுமன்றத்திற்கு ஒரு வாக்கும், சட்டமன்றத்திற்கு ஒரு வாக்கும் அளிக்க வேண்டும். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் தஞ்சை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், பாகம் எண், வரிசை எண் என அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்ட வாக்காளர் அடையாள சீட்டு நிலை அலுவலர்களால் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் சீட்டில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை எனவும், மற்றொரு பகுதிகளில் வழங்கப்பட்ட வாக்காளர் சீட்டில் வாக்குப்பதிவு நேரம் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். கைபேசிக்கு அனுமதியில்லை: அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு தனி வரிசை உள்ளது. மூத்த குடிமக்கள் வாக்களிகக் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் வாக்குச்சாவடிக்குள் கைபேசி, புகைப்பட கருவி போன்ற மின்னணு இயந்திரகருவிகள் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்க்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி

17வது மக்களவை தேர்தல் துவங்கியதிலிருந்து இதுவரை தஞ்சை மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான அண்ணாதுரை ஒரு முறை மட்டுமே பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். தேர்தலுக்கு முன்பாக குறைந்தபட்சம் 5 முறை பத்திரிகையாளர் சந்திப்பை அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் நடத்தி பத்திரிகையாளர்களுக்கு தேர்தல் ஏற்பாடுகளை விளக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் ஏனோ தஞ்சை மாவட்டத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு தவிர்க்கப்படுவது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் பத்திரிகையாளர்கள் தேர்தல் தொடர்பாக எந்தவித தகவலும் சரிவர கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

Related Stories: