கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும்

ஈரோடு, ஏப். 17: கீழ்பவானி வாய்க்காலில் மே 10ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு கூறியிருப்பதாவது:தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போது மஞ்சள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. எள், தேங்காய், நிலக்கடலை போன்ற எண்ணெய் வித்து பயிர்களும், கரும்பு போன்ற நீண்ட கால பயிர்களும் அறுவடைக்கு தயாராக உள்ளது. தற்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. தினக்கூலியும் பல மடங்கு உயர்ந்து விட்டது. மஞ்சள் ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரையும், எள் ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாயும், கரும்பு டன்னுக்கு ஆயிரம் ரூபாய் வரையும் கூலி உயர்ந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் மஞ்சள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 12 குவின்டால் மட்டுமே கிடைக்கிறது. விலையும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.

இதனால், ஒரு ஏக்கர் பயிடப்பட்ட மஞ்சள் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பல மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆளும் அரசும் அக்கறை உள்ள அரசியல் கட்சிகளும் காப்பீட்டு நிறுவனத்தை வலியுறுத்தி உரிய இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ்பவானி வாய்க்காலில் முறை பாசனத்திலும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில்லை. மாவட்ட நிர்வாகம் மே 10ம் தேதி வரை கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க முடியும். இவ்வாறு சுதந்திரராசு கூறி உள்ளார்.

Related Stories: