வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும்

ஈரோடு, ஏப். 16: மக்களவை தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு சுழற்சி முறையில் தேர்தல் நுண்பார்வையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணி மற்றும் பயிற்சி நேற்று நடந்தது. இந் நிகழ்ச்சிக்கு தேர்தல் பொது பார்வையாளர் டாக்டர் மாணிக் குர்ஷால் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து நேரடியாக பொது பார்வையாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நுண்பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களது வாக்குச்சாவடி தொடர்பான அனைத்து விபரங்களையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குப்பதிவு முன்னேற்பாடு பணியினை ஆய்வு செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 11 அடையாள அட்டை மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு முன்புறம் வாக்குச்சாவடி எண், சட்டமன்ற தொகுதி எண் மற்றும் வேட்பாளர் பட்டியல், வேட்பாளர்களின் முகவர்கள் செயல்பாடு, அடிப்படை வசதி ஆகியவை சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்கள் மட்டும் வருகிறார்களா என்பதை பதிவு செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள படிவம் மற்றும் பதிவேடுகளை வாக்குப்பதிவு முடிவடைந்த பின் தேர்தல் பொது பார்வையாளரிடம் நேரில் வழங்க வேண்டும். தேர்தல் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் தினேஷ், ஈஸ்வரன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர், தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட நுண்பார்வையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: