ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்க வேண்டும் காங். வேட்பாளர் வசந்தகுமார் பிரசாரம்

கருங்கல், ஏப்.14 : கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் கருங்கல் காமராஜர் சிலை சந்திப்பு பகுதியில் இருந்து நேற்று காலை தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவை தேர்தலில் பாஜவும், அதிமுகவும் கூட்டணி அமைத்துள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கின்ற நேரத்தில் மோடியா? இந்த லேடியா? என்று சவால் விட்டு பேசி மத்திய அரசை எதிர்த்தார். ஜெயலலிதா இறந்த பிறகு, அவரால் பதவி பெற்றவர்கள் இன்று பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இது எப்படி நியாயம் என்று அதிமுக தொண்டர்கள் கேட்கின்றனர். அந்த கூட்டணி பொருந்தாத கூட்டணி.

உண்மையான அதிமுக தோழர்கள் பாஜவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். தம்பித்துரை பாராளுமன்றத்தில் மத்திய அரசை பார்த்து ₹15 லட்சம் வங்கியில் ஏன் செலுத்தவில்லை, ஆண்டு 2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்றீர்களே ஏன் தரவில்லை, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை ஏன் செய்யவில்லை, என்று கேட்டார். அதையும் மீறி முதல்வர், துணை முதல்வர் பாஜவுடன் கூட்டணி சேருகிறார்கள் என்றால் அது பொருந்தாத கூட்டணி. இன்று அந்த கூட்டணி களத்தில் உள்ளது.

காங்கிரஸ் அரசு இருக்கின்ற போது வயதான ஏழைகளுக்கு உதவித்தொகையாக ரூ.1000ல் 80 சதவீதம் காங்கிரஸ் அரசு கொடுத்தது. ஆனால் மோடிக்கு ஜெயலலிதா மீதுள்ள கோபத்தால் தமிழகத்தில் 30 சதவீதம் கூட பணம் இன்று வருவது இல்லை. எனவே பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை என்ன ஆயிற்று? என்று அவரிடம் கேளுங்கள், அப்போதுதான் பா.ஜ.,வுக்கு உணர்ச்சி வரும் . எனவே கை சின்னத்திற்கு வாக்குகளை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். தொடர்ந்து மூசாரி ஜங்ஷன், முள்ளங்கினாவிளை ஜங்ஷன், மாங்கரை, மாதாபுரம், கம்பிளார், குஞ்சாக்கோடு உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். மாலையில் கீழ்குளம், முள்ளூர்துறை, மேல்மிடாலம், உதயமார்த்தாண்டம், தெருவுக்கடையில் நிறைவு செய்தார்.

Related Stories: