கன்னியாகுமரி தொகுதிக்கு முன்னாள் எம்.பிக்கள் செய்த சாதனையை வெளியிட தயாரா? முன்னாள் போக்குவரத்து கழக அதிகாரி கேள்வி

நாகர்கோவில், ஏப். 14: கன்னியாகுமரி தொகுதிக்கு செய்த சாதனைகளை முன்னாள் எம.பிக்கள் பகிரங்கமாக வெளியிட தயாரா? என முன்னாள் போக்குவரத்து கழக அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். நாகர்கோவில் தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற அலுவலக கண்காணிப்பாளர் தம்பிராஜ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1977ல் குமரி மக்கள் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற குமரி அனந்தன் அதன்பின் இதுவரை வாக்களர்களை சந்திக்கவில்லை. நாகர்கோவில் தொகுதி வேட்பாளராக வலம் வரும் அவரது தம்பி வசந்தகுமார் நான்குநேரி எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டத்தை இரண்டாக பிரித்தபோது, தலைமை அலுவலகத்தை முன்பிருந்தது போல், நாகர்கோவிலில் அமைக்க பலரும் குரல் எழுப்பினர். ஆனால் வசந்தகுமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி, தலைநகரை திருநெல்வேலிக்கு கொண்டு சென்று குமரி மக்களுக்கு  ஓரவஞ்சனை செய்தார். அவரது கடந்த ேதர்தல் அறிக்கையே இதற்கு சான்றாகும். ₹417 கோடிக்கு அதிபதியான இவர் மண்ணின் மைந்தராய் இருந்தாலும் அவர் இருப்பிடம் சென்னை. இவருடைய சொத்துக்கள் மற்றும் தென்னிந்தியா முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை கவனிப்பாரா? அல்லது மக்களுக்கு சேவை செய்வாரா? என்பதனை சிந்தியுங்கள். இவரது அண்ணன் குமரி அனந்தன் போல் இவரும் சென்று விடுவார்.

நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல் போன்ற இடங்களில் நம் மண்ணின் மைந்தர்கள் பிழைப்புக்காக நடத்தி வரும் நிறுவனங்களுக்கு போட்டியாக கிளைகள் அமைத்துள்ளார்.  எம்.எல்.ஏ பதவி வகிக்கும் இவருக்கு எம்.பி பதவியின் மேல் ஆசை ஏன்?. சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள பா.சிதம்பரத்திற்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியா? கார்த்தி சிதம்பரத்திற்கு எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு. ஊழல் பேர்வழிகளை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா? மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மீனவர்களை இலங்கை அரசுடன் பேசி பாதுகாத்துள்ளார். நான்கு வழிச்சாலை, மேம்பாலங்கள், சாலைகள், மணக்குடி பாலம், ரயில்வே மேம்பாலங்கள், இரட்டை ரயில்பாதை என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் செய்துள்ளார். 150 மீட்டர் குழித்துறை ஆற்றுப்பாலம் அமைய நிதி ஆதாரங்களுக்கு வழிவகுத்தவர். வேளாங்கண்ணி, நாகூருக்கு ரயில் பெற்று தந்துள்ளார். கேசவன்புத்தன்துறை, பள்ளம்துறை, வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டம் துறை, மண்டைக்காடு புதூர் மீன்பிடி தளங்கள் அமைய உள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் 49 ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளனர். இதுபோல், குமரி முன்னாள் எம்பிக்களான குமரி அனந்தன், டென்னிஸ், பெல்லார்மின், ஹெலன் டேவிட்சன் ஆகியோரும் தங்களது சாதனை பட்டியலை பகிரங்கமாக வெளியிட தயாரா?. இதுபோன்ற  சாதனைகள் புரிந்துள்ள பொன்.ராதாகிருஷ்ணனை தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: