திருப்பரங்குன்றத்தில் கோயில் வாசலை மறித்து நின்ற தேமுதிக வேட்பாளர் வாகனம் ஒரு மணிநேரம் பக்தர்கள் டென்ஷன்

திருப்பரங்குன்றம், ஏப்.11: திருப்பரங்குன்றம் கோயில் வாசல் முன்பு பிரச்சார வாகனத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேமுதிக வேட்பாளர் நிறுத்தி வைத்ததால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் அழகர்சாமி போட்டியிடுகிறார். இவர் நேற்று  காலை திருப்பரங்குன்றத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் வாசலில் காலை ஏழு மணி முதல் தொண்டர்கள் வரத்துவங்கினர். பின்னர் அவர்கள் ஆரத்தி தட்டுடன் கோயில் வாசல் முன்பு சன்னதி தெருவில் வரிசையில் நிற்க துவங்கினர் இதனைத்தொடர்ந்து பிரச்சார வாகனமும் கோயில் வாசல் முன்பு சன்னதி தெருவில் நின்றது. கூட்டணி கட்சியான அதிமுக.வை சேர்ந்த மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா வருகைக்காக வேட்பாளர் அழகர்சாமி உட்பட தொண்டர்கள் காத்திருந்தனர். இவர்கள் அனைவரும் கோயில் வாசல் முன்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர். இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக நேற்று திருமண முகூர்த்த தினம் என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.  பக்தர்கள் முகம் சுழித்தவாறு வேறு வழியின்றி வெயிலில் நின்று புலம்பி சென்றனர்.

Related Stories: