திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில்அரசியல் தலைவர்களின் வருகையால் அனல் பறக்கும் பிரசாரம்

திருவண்ணாமலை, ஏப்.3: திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் தலைவர்களின் பிரசாரத்தால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, வரும் 16ம் தேதி மாலை 5 மணி வரை பிரசாரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதித்திருக்கிறது. எனவே, பிரசாரத்துக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது.திருவண்ணாமலை தொகுதியில் 25 வேட்பாளர்களும், ஆரணி தொகுதியில் 15 வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர். ஆனாலும், திமுக, அதிமுக மற்றும் அமமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.சுட்டெரிக்கும் கோடை வெயில், வேட்பாளர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. ஆனாலும், வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தீவிர வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்களின் முதற்கட்ட பிரசார பயண திட்டத்திலேயே, திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகள் இடம் பெற்றன. எனவே, இரண்டு தொகுதிகளிலும் அடுத்தடுத்து தலைவர்களின் வருகையால், தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது.

திருவண்ணாமலையில் திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 23ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து, வரும் 6ம் தேதி ஆரணியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறார்.அதேபோல், திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்து முடித்துவிட்டனர். மேலும், அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் இரண்டு தொகுதிகளிலும் பிரசாரத்தை முடித்துவிட்டனர்.அதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இரண்டு தொகுதிகளிலும் ஏற்கனவே சீமான் பிரசாரம் செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அடுத்த வாரம் கமலஹாசன் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.மேலும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர், ஆரணி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து, திமுக கூட்டணி கட்சி தலைவர்களான மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும், திமுக வேட்பாளரை ஆதரித்து நாளை (4ம் தேதி) திருவண்ணாமலையில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பிரசாரம் செய்ய உள்ளார்.திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் அடுத்தடுத்து அரசியல் கட்சி தலைவர்களின் வருகையால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது.

Related Stories: