சாலை விரிவாக்க பணியால் குட்டை போல மாறும் ஓசூர் ராமநாயக்கன் ஏரி

ஓசூர், மார்ச் 29: சாலை விரிவாக்கப் பணிக்காக, ஓசூர் ராமநாயக்கன் ஏரியை கையகப்படுத்துவதால், பரப்பளவு குறைந்து குட்டையாக மாறி வருகிறது. கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரி, 140 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்தது. இந்த ஏரியை நடைபாதைக்கும்,  ஏரிக்கரை சாலையை அகலப்படுத்துவதாகவும் கூறி துண்டாடி  உள்ளனர். இதனால், ஏரி குட்டை போல் காட்சியளிக்கிறது. இந்த ஏரியில்  இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் மதகு, கலை நயமிக்க கல் தூண்களால்  செய்யப்பட்டுள்ளது. இது பாதுகாக்க வேண்டியதாக  உள்ளது. இதுகுறித்து  முன்னாள் எம்எல்ஏ மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூர் தொழில் நகரமாக மாறியுள்ளது. பாரம்பரியம் மிக்க இந்த நகரில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த  கல்வெட்டுகள், கோயில்கள், நீர்நிலைகள் உள்ளன. அதில் ஒன்றான ராமநாயக்கன் ஏரியை, பல நூறு ஆண்டுக்கு முன்னர் கட்டியுள்ளனர். இந்த  ஏரி ஆரம்பத்தில் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும்  பயன்படுத்தப்பட்டது. பின்னர் நகரம் வளர்ச்சி அடையவே, சுமார் 3 ஆயிரம்  ஆழ்துளை கிணறுகளின் நீராதார தாயாக ஏரி உள்ளது.

இந்நிலையில், தேவையின்றி  சாலையை அகலப்படுத்துவதாக கூறி, சுமார் 50 அடிக்கும் மேல் ஏரியை ஆக்கிரமித்து  சாலையை அகலப்படுத்தி வருகின்றனர். மேலும், ஏரியில் புராதன சின்னமாக உள்ள  கல்தூண் மதகை அப்புறப்படுத்த உள்ளதாக தெரிகிறது. இதனால் நகரின் நீராதாரம்  குறைகிறது. மேலும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவும் குறைந்து வருகிறது. எனவே, புராதன  சின்னமாக உள்ள ஏரியை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை தடுக்கவும், மக்களை  கொண்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுதொடர்பாக, உயர் அதிகாரிகள் தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சின்னகுட்டப்பா, கிருஷ்ணன், சத்தியமூர்த்தி, முத்தப்பா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: