அம்மன் கோயில் தீ மிதி விழா

புழல், மார்ச் 26: பாடியநல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் 54ம் ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர், பர்மா நகரில் மிகப் பழமையான முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோயிலில் 54ம் ஆண்டு பங்குனி உத்திர தீமிதி திருவிழாவை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி  கொடியேற்றத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது.

அன்று முதல் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், காப்பு கட்டுதல், இசை நிகழ்ச்சிகள், அம்மன் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்றன.  இந்நிலையில், கோயில் வளாகத்தின் முன் நேற்று முன் தினம் மாலை காப்பு கட்டி விரதம் இருந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். இதில் செங்குன்றம், புழல், வடகரை,  சோழவரம், காரனோடை, ஆத்தூர் மற்றும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  இவ்விழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மாதவரம் துணை  ஆணையர் ரவாளி பிரியா, புழல் உதவி கமிஷனர் ரவி ஆகியோர் மேற்பார்வையில் புழல் மற்றும் செங்குன்றம் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அறங்காவலர்கள்,  அன்னதான குழு மற்றும் கிராம பொதுமக்கள்  செய்திருந்தனர்.

Related Stories: