பனமங்கலம் கிராமத்தில் 4 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மேல்நிலை நீர்தேக்கதொட்டி குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

மண்ணச்சநல்லூர், மார்ச் 22:  கூத்தூர் ஊராட்சி பனமங்கலம் கிராமத்தில் 4 ஆண்டுகளாகியும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை திறக்காததால் பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் உள்ள கூத்தூர் பஞ்சாயத்திற்க்குட்பட்ட பனமங்கலம் கிராமத்தில் சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்த கிராமத்தில் கடந்த நான்காண்டுகளுக்கு முன் மேல் நிலை நீர்தேக்க தொட்டி 2013 -14-ம் ஆண்டு மத்திய மாநில அரசு நிதியில் சுமார் ரூ.8.34 லட்சம் மதிப்பில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. பனமங்கலம், செங்கொண்டான் பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய கட்டப்பட்ட இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.

இதை குறித்து அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி (67) என்பவர் கூறும்போது, கடந்த 2011ல் அப்பகுதி பொதுமக்கள்  சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று ஆண்களும், பெண்களும் தலையில் தண்ணீர்கொண்டு வந்த நிலை இருந்தது. இதனால் அப்போது கூத்தூர் ஊராட்சி தலைவராக சித்ரா என்பவர் பதவி வகித்தபோது மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு மத்திய, மாநில அரசு நிதியினை பெற்று 2013- 14ம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் இன்றுவரை தொட்டியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட ஏற்றப்படவில்லை. மேலும் அந்த தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படும் மின் மோட்டாரை ஊராட்சி செயலாளர் எடுத்து சென்று இன்று வரை அந்த மோட்டார் என்ன நிலை என்பது தெரியவில்லை. இதுவரை பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்தேக்க தொட்டியின்கீழ் கருவேலமரங்கள் வளர்ந்து காடுபோல் காணப்படுகிறது. இப்பகுதி கழிவறையாக மாறிவருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் கூத்தூர் பஞ்சாயத்திற்க்குட்பட்ட பனமங்கலத்தில் போர்போட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி முடித்து மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னரும் தண்ணீர் மட்டும் ஏற்றப்படவில்லை. அரசும், அரசு அதிகாரிகளும் மக்கள் நாங்கள் தண்ணீருக்ககாக படும் கஷ்டத்தை யாரிடம் முறையிடுவது என்று அப்பகுதி பெண்கள் குமுறுகின்றனர்.   

Related Stories: