திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் காவடி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது. மேலும், காவடி ஏந்தி பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்து வழிபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியமான விழாக்களில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் சிறப்புக்குரியது. அதன்படி, பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நேற்று விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி, நேற்று மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி கருவறையில், சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, கோயில் கொடி மரம் முன், மாலை 5 மணியளவில் சுவாமி எழுந்தருளி மாலை மாற்றும் வைபவமும் நடைபெற்றது. பின்னர், கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில், இரவு 11 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

அதைத்தொடர்ந்து, நள்ளிரவு 12 மணி அளவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதிஉலா நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக, இன்று கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகபடியும், 23ம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவமும், 24 மற்றும் 25ம் தேதிகளில் ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். விழாவின் நிறைவாக, வரும் 26ம் தேதி மதியம் 12 மணியளவில் தாமரை குளத்தில் பாலிகைவிடுதல் நிகழ்ச்சியும், குமரகோயிலில் மண்டகபடியும் நடைபெறும். அன்று இரவு இன்னிசை கச்சேரி, வாணவேடிக்கை நிகழ்ச்சியுடன் சுவாமி வீதிஉலா நடைபெறும்.

இந்நிலையில், பங்குனி உத்திரத்ைத முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பத்திளையனார், கோபுரத்திளையனார் சன்னதிகளில் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து, நூற்றுக்கணக்கான முருக பக்தர்கள் காவடி ஏந்தி, மாடவீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

Related Stories: