கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்த நெல்லுக்கு பணம் வரவு வைக்காததால் விவசாயிகள் அவதி

பாபநாசம்,  மார்ச் 20: பாபநாசம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில்  பெரும்பாலான விவசாயிகள் விற்பனை செய்த நெல்லுக்கு இன்னும் பணம் வரவு  வைக்காததால் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாபநாசம் அடுத்த  தேவராயன்பேட்டை,  திருக்கருக்காவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் கொள்முதல்  நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில்  விவசாயிகளிடமிருந்து  கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு விவசாயிகளின்  வங்கி கணக்கில்  உடனடியாக பணம் வரவு வைக்காததால் சிரமத்துக்கு   ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பாபநாசம் அடுத்த பெருமாங்குடியை  சேர்ந்த ஒரு  விவசாயி கூறுகையில், விவசாயம் செய்வது என்பதே இப்போது சாபமாக  மாறிவிட்டது. முப்போகம் விளைந்த மண்ணில் ஒருபோகம் தான் நடக்கிறது.   இதிலும் பெரிய போராட்டத்துக்கு பிறகு தான் நெல்லை அறுவடை செய்து கொள்முதல்  நிலையத்தில் கடந்த 2ம் தேதி விற்பனை செய்தேன். எனது வங்கி கணக்கில் ரூ.81  ஆயிரம் வரவாக வேண்டியது. ஆனால் இன்று வரை பணம் வரவு வைக்கவில்லை. எப்படி   குடும்பம் நடத்துவதென்று தெரியவில்லை.

கடனை வாங்கித்தான் விவசாயத்தில் முதலீடு செய்தோம். எங்களுக்கு இரண்டாயிரம் தருவதைவிட எங்களது உழைப்பின் பலன் எங்களுக்கு கிடைத்தால் போதும் என்றார்.

Related Stories: