திருவண்ணாமலை தொகுதியில் பின்நோக்கி நடந்து வந்து ‘மனிதன்’ மனுதாக்கல்

* டிஜிட்டல் இந்தியாவில் ‘செக்’ வாங்க மறுப்பது வேதனை * இந்தியாவைச் சேர்ந்தவர் மீண்டும் உலக அழகியாக வந்தால் திருமணம் செய்வேன்

திருவண்ணாமலை, மார்ச் 20: திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட, நாட்றம்பள்ளியை சேர்ந்த நபர் பின்நோக்கி நடந்து வந்து சுயேட்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்தார். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அப்போது, வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, அக்ரகாரம் கிராமத்தைச் சேர்ந்த மனிதன்(52) என்பவர், பின்நோக்கி நடந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.பின்னர், ஏற்கனவே பூர்த்தி செய்து எடுத்து வந்த வேட்புமனுவை, திருவண்ணாமலை தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியிடம் அளித்தார். டெபாசிட் தொகையை பணமாக செலுத்தாமல், காசோலையாக (செக்) வழங்கினார். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, சுயேட்சை வேட்பாளரின் மனுவை 10 வாக்காளர்கள் முன்மொழிவது அவசியம். மேலும், டெபாசிட் தொகையை ரொக்கமாக அல்லது வரைவோலையாக (டிடி) மட்டுமே செலுத்த வேண்டும். எனவே, இந்த இரண்டு விதிமுறைகளையும் பின்பற்றாமல் மனிதன் என்பவர் தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடியாகும் என கூறப்படுகிறது.

பின்னர், சுயேட்சையாக மனுதாக்கல் செய்த ‘மனிதன்’ கூறியதாவது:எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்துவிட்டு, அஞ்சல் வழியில் எம்ஏ பட்டம் பெற்றிருக்கிறேன். நாட்றம்பள்ளியில் டிஜிட்டல் ஸ்டுடியோ மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறேன். உலக அமைதிக்காக கடந்த 25 ஆண்டுகளாக பின்நோக்கி நடக்கிறேன். 16 ஆண்டுகள் பேசாமலும் இருந்தேன். வார்டு உறுப்பினர் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை மனுதாக்கல் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் மனுதாக்கல் செய்கிறேன். ஆனால், ஒருமுறைகூட என் மனுவை ஏற்கவில்லை. அதனால், பொதுத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை.

என்னுடைய மனுவை யாரும் முன்மொழிய முன்வருவதில்லை. என்னிடம் பணம் இல்லை. செக் மட்டுமே உள்ளது. டிஜிட்டல் இந்தியாவில் ‘செக்’ ஏற்க மறுப்பது வேதனையாக இருக்கிறது. உலக அழகி ஐஸ்வர்யாராயை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தேன். ஆனால், திருமணம் செய்ய முடியவில்லை. மீண்டும் இந்தியாவைச் சேர்ந்தவர் உலக அழகியாக வந்தால்தான் திருமணம் செய்வதாக இருக்கிறேன். அந்த லட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.முகத்திலும், வார்த்தையிலும் எந்த சலனமும் இல்லாமல் சீரியசாக ‘மனிதன்’ அளித்த பேட்டியால், அங்கிருந்தவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் திணறினர். திருவண்ணாமலை ெதாகுதியில் வேட்புமனு தாக்கலின் முதல் நாளிலேயே அரங்கேறிய ‘காமெடி’ அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

Related Stories: