கஜா பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் பாக்கி மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக புகார்

வேலூர், மார்ச் 20:கஜா பாதிப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பள பாக்கி உள்ளதாகவும், இவ்விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது.தமிழகத்தின் நாகையில் கடந்த நவம்பர் 15ம் தேதி இரவு கஜா புயல் கரையை கடந்தது. இதனால் நாகை மட்டுமின்றி திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை டெல்டா மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் 45க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் மற்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்ததாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் விவசாய நிலங்கள் சேதமானது. சுமார் 1.70 லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்ததாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது. அதேபோல், 347 மின்மாற்றிகள், 39 ஆயிரத்து 938 மின்கம்பங்கள் மற்றும் 3 ஆயிரத்து 559 கி.மீ நீளமுள்ள மின் ஒயர்கள் சேதமடைந்தன. இதனால், மின்சாரம் இல்லாமல் தென்மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இருளில் தவித்தனர். எனவே, சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றியமைக்க வேண்டும் என்று டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து மின்வாரிய அதிகாரிகள் தலைமையில் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், 3 மாதங்களாகியும் இதுவரை பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், மின்வாரிய ஊழியர்கள் மத்திய, மாநில அரசுகள் மீது அதிருப்தியில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ‘கஜா புயல் பாதிப்பின்போது, அலுவலகத்தில் பணிபுரிவதற்கான சம்பளத்துடன், கூடுதலாக இரட்டிப்பு சம்பளம் வழங்குவதாக கூறி மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதன்படி, ஒவ்வொரு நாளும் 3 மடங்கு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால், கஜா புயல் பாதிப்பை சரிசெய்வதற்கான இரட்டிப்பு சம்பளம் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை. தற்காலிக பணியாளர்களுக்கு மட்டுமே உடனடியாக கூலி வழங்கப்பட்டது.டெல்டா மாவட்டங்களில் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மொத்தமாக கோடிக்கணக்கில் சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், ‘எங்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை. நாங்கள் யாரிடம் கேட்பது’ என்று வேதனை தெரிவிக்கின்றனர். மாநில அரசுக்கு, மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதால் சம்பள பாக்கி வழங்குவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற மத்திய, மாநில அரசுகள் அலட்சியமாக செயல்படுவதால் சம்பள பாக்கி கிடைக்குமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, இரவும் பகலுமாக கண்விழித்து உழைத்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: