கும்மிடிப்பூண்டி அருகே ஈகுவார்பாளையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத அரசு பள்ளி

கும்மிடிப்பூண்டி, மார்ச் 20: ஈகுவார்பாளையம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவருடன் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம்  ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நாகராஜ் கண்டிகை, குமரன்நாயக்கன் பேட்டை, சாணாபுத்தூர், கோங்கல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட  கிராமப்புற மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறைகள் இல்லை என கூறப்படுகிறது.  பள்ளியில் சுத்தமான குடிநீர் வருவதில்லை. குடி நீர் குழாய் பழுதடைந்து ஒழுகுகிறது.  குடிநீர் தொட்டி  அவ்வப்போது சுத்தம் செய்யப்படாததால் பாசி படிந்துள்ளது.  சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்தும் மாணவர்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக் உள்ள ஆகு, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வருகின்றது. மேலும், மாணவர்கள் மட்டும்  பயன்படுத்தும் கழிவறை பராமரிப்பும், தண்ணீர் வசதியும் இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது.  சுகாதாரமற்ற கழிவறையை பயன்படுத்த தயங்குவதால் திறந்த வெளியை மாணவர்கள் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றர். இதனால்  அந்த பகுதி முழுவதும் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மாணவர்களுக்கான கழிப்பறையின் சுற்றுப்புறம் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது. இதனால், பாம்பு போன்ற விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் கழிவறையை பயன்படுத்தாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர்.  மேலும், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் அத்துமீறி பள்ளி வளாகத்தில் புகுந்து செய்யக்கூடாத  காரியங்களில் ஈடுபடுகின்றனர். எனவே, அரசு பள்ளி வளாகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், வளாகத்தை சுகாதாரமாக பாதுகாக்கவும் பள்ளிக்கு சுற்றுச்சுவர்,  கழிவறை அமைக்கவும், சுகாதாரமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும்  மாவட்ட ஆட்சியரும், கல்வித்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: