மேச்சேரி, மார்ச் 19: நங்கவள்ளி அருகே பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ₹56 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில், 33 பறக்கும் படைகள், 33 நிலை கண்காணிப்பு குழுவினர் வீடியோ சர்வைலன்ஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி ₹50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் சட்டமன்ற தொகுதி, நங்கவள்ளி-மேட்டூர் மாநில நெடுஞ்சாலையில் தெப்பகுளம் அருகே பறக்கும்படை அதிகாரி தாகூர் தலைமையில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, மேட்டூரில் ஓட்டுனர் பயிற்சி நடத்தி வரும் ரவிசந்திரன்(55) என்பவர் தனது வீட்டில் இருந்து, தாரமங்கலம் வழியாக மேட்டூரில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளி வாகனத்தில் சென்றார். அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனையிட்ட போது, உரிய ஆவணம் இல்லாமல் காரில் வைத்திருந்த ₹56,100 பறிமுதல் செய்து, இடைப்பாடி சட்டமன்ற தேர்தல் அதிகாரி ரவிசந்திரனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணத்தை காண்பித்த பின்னர், பணத்தை பெற்று செல்லும்படி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: