இந்த ரோட்டில் போனால் கட்டாயம் பஞ்சர்தான் பல ஆண்டாக இதேநிலையால் பொதுமக்கள் அவதி

மதுரை, மார்ச் 12:  மதுரையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு கரடு முரடாக காட்சியளிக்கும் ரோட்டினால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் 28வது வார்டாக ஐகோர்ட் மதுரைக்கிளை அருகேயுள்ள பகுதிகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கன்னிமாரம்மன் நகர் மெயின்ரோட்டை கடந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். இங்கு தார் ரோடு போடுவதற்ா கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கற்கள் பரப்பி போடப்பட்டது. அதன்பின் எந்த ஒரு பணியும் இதுவரை நடக்கவில்லை. ஜல்லிக்கற்கள் முழுவதும் தரையில் கூர்மையான ஆயுதம் போல எகிறி நிற்கிறது. இதனால் வாகனங்களின் டயரை பதம் பார்த்து அடிக்கடி பஞ்சராக்கி விடுகிறது. மேலும் நடந்து செல்ல முடியாமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்த ரோட்டின் பணிகளை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: