புதிய பாடத்திட்டம் நிர்ணயம் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு போட்டித்தேர்வு

நாகர்கோவில், மார்ச் 6:  ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு போட்டித்தேர்வுக்கு என புதிய பாட திட்டம் நிர்ணயம் செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலர் (தற்போது வட்டார கல்வி அலுவலர்) பணியிடங்களில் ஒவ்வொரு ஆண்டும் காலி ஏற்படும் நிரந்தர பணியிடத்தில் 50 சதவீத பணியிடங்களை நேரடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரப்பலாம் என அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் 70 சதவீத நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து பணி மாறுதல் மூலமாகவும், 30 சதவீத ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலமாகவும் நிரப்பப்பட வேண்டும் எனவும் திருத்தம் வெளியிடப்பட்டது. இந்த 30 சதவீத வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் பாடவாரியாக நிரப்ப பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு நிரப்பப்பட்டனர்.

இதில் வட்டார கல்வி அலுவலர் பணியிடம் நிர்வாகம் மற்றும் கல்வி ஆய்வு பணியிடமாக உள்ளதால் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு பாடவாரியாக தேர்வு செய்யும் முறை நீக்கம் செய்யப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கு பின்பற்றப்படும் நடைமுறையை பின்பற்றவும், இப்பணியிடத்திற்கு பாட சுழற்சி முறையை பின்பற்ற தேவையில்லை என்றும், அதன்படி வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கென தேர்வாளர்களை தேர்வு செய்யுமாறு தொடக்க கல்வி இயக்குநருக்கு அரசால் அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் ஆசிரியர் தேர்வுவாரியத்தால் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படும் வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுக்கு தேர்வுக்கான கால அளவு மற்றும் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டு தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தொடக்க பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றினால் வழங்கப்பட்ட இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான பட்டம் மற்றும் மாநில பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பி.எட்., பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டு தேர்வு செய்யப்பட உள்ளதால் மதிப்பெண் முறையில் 110 மதிப்பெண்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் சேர்ந்து பட்டதாரி தரத்தில் ஒரு பொதுவான பாட திட்டமும், 10 மதிப்பெண்களுக்கான பொது அறிவு பாட திட்டமும், 30 மதிப்பெண்களுக்கான கல்வி வழிமுறைகள் பாட திட்டமும் என்ற முறையில் 150 மதிப்பெண்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரால் தயார் செய்யப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க தொடக்க கல்வி இயக்குநர் கோரியிருந்தார்.

இந்தநிலையில் இதனை ஏற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கு போட்டி தேர்வு நடத்துவதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார். தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் ஆகும். தேர்ச்சி பெற குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் பொது பிரிவினருக்கு 50 சதவீதம், ஆதி திராவிடர் 45 சதவீதம் மற்றும் பழங்குடியினர் 40 சதவீதம் எனவும் பின்பற்ற தொடக்க கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தவும் அரசு முதன்மை செயலாளரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: