கோடநாடு வழக்கில் மேல் விசாரணை நடத்தும் காவல்துறை மீது அதிமுகவினர் உள்நோக்கம் கற்பிப்பது குற்ற உடந்தை!: திமுக கண்டனம்..!!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மீது அதிமுகவினர் உள்நோக்கம் கற்பிப்பதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், கோடநாடு வழக்கில் மேல் விசாரணைக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றம் சென்றிருப்பதால் மர்மம் வலுப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் பங்களாவில் உண்மையில் நடந்தது என்ன என்பதை ஊருக்கு சொல்ல அதிமுக தலைமை தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ள திமுக, மேல் விசாரணை நடத்தும் காவல்துறையினர் மீது உள்நோக்கம் கற்பிப்பது குற்ற உடந்தை ஆகும் என்று கண்டித்துள்ளது. குற்றவியல் விசாரணை சட்டப்பிரிவு 173ன் கீழ் 8ன் படி எந்த வழக்கிலும் மேல் விசாரணை நடத்த போலீசாருக்கு அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ள திமுக, காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தின்படியே கோடநாடு வழக்கில் மேல் விசாரணை நடப்பதாக விளக்கம் அளித்திருக்கிறது. கோடநாடு கொலை, கொள்ளை நடந்ததும், வழக்கு தொடரப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான் என்பதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவர்கள் பிணை பெற்றதாக கூறியுள்ளது. வழக்கில் தொடர்புள்ள சிலர், முன்சொல்ல முடியாத சில தகவல்களை தற்போது கூற முன்வந்துள்ளதாகவும் திமுக தெரிவித்துள்ளது. கோடநாடு குற்ற சம்பவத்தில் அதிமுக மேலிடத்தில் இருப்பவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட சிலர் கூறியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது செய்தியாளர் மேத்யூ சாமுவேல் நேரடியாகவே குற்றம்சாட்டியதாக முரசொலி தலையங்கத்தில் திமுக குறிப்பிட்டிருக்கிறது. குற்றவியல் விசாரணை முறை சட்டப்படி, எந்த கட்டத்திலும் காவல்துறை, மேல் விசாரணை நடத்தலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ள திமுக, நேர்மையான விசாரணை அடிப்படையில் தான் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நீதிபதியின் கருத்தை அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. எனவே கோடநாடு வழக்கில், உண்மையை வெளிக்கொண்டுவர தடையாக இருக்க மாட்டோம் என்று அதிமுக தலைமை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திமுக, எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளது. இவற்றை செய்யாமல், காவல்துறைக்கு உள்நோக்கம் கற்பிப்பது கண்டிக்கத்தக்கது என திமுக கூறியிருக்கிறது. …

The post கோடநாடு வழக்கில் மேல் விசாரணை நடத்தும் காவல்துறை மீது அதிமுகவினர் உள்நோக்கம் கற்பிப்பது குற்ற உடந்தை!: திமுக கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: