ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சப்-கலெக்டரிடம் தஞ்சம்

வேலூர், பிப்.22: கணியம்பாடி அருகே ₹70 ஆயிரம் கடனுக்காக, செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வேலூர் சப்-கலெக்டர் மெகராஜிடம் தஞ்சமடைந்தனர்வேலூர் மாவட்டம் கணியம்பாடியை சேர்ந்தவர் சரவணன்(33), செங்கல் சூளை உரிமையாளர். இவரிடம் ஊசூர் அடுத்த கோவிந்தரெட்டிபாளையத்தை சேர்ந்த வேலு என்பவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ₹70 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக, வேலுவின் குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தார்களாம். இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு வேலு இறந்து விட்டார்.

தொடர்ந்து ₹70 ஆயிரம் கடனுக்கு வட்டியுடன் ₹2 லட்சம் கொடுக்கும் வரை என்னிடம் வேலை செய்ய வேண்டும் என்று வேலுவின் மகன்கள் ராஜேஷ்(24), கோவிந்தசாமி(20) மற்றும் கடைசி மகனான 17 வயது சிறுவன் ஆகியோரை சரவணன் கொத்தடிமைகளாக வைத்திருந்துள்ளார். இவர்களில் கடைசி மகனான 17 வயது சிறுவன் 5ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தார்.

ராஜேஷூக்கு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தையும், கோவிந்தசாமிக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இதில் ராஜேஷ் மனைவி மீனாட்சியும்(22) கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அதே செங்கல்சூளையில் கொத்தடிமையாக வைக்கப்பட்டார். இவர்களின் குடும்பத்துக்கு வாரம் தலா ₹200 மட்டும் கூலி வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அனைவரும் குடும்பத்துடன் தப்பித்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களை தேடிச்சென்ற சரவணன் வேலைக்கு வர வேண்டும் என்று மிரட்டினாராம்.இதுகுறித்து, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தினருக்கு தெரியவந்தது. அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் மெகராஜ் முன்னிலையில் ராஜேஷ்(24), மீனாட்சி(22), கோவிந்தசாமி(20), 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரும் நேற்று தஞ்சம் அடைந்தனர்.அவர்களிடம் விசாரணை நடத்திய சப்-கலெக்டர் மெகராஜ், அனைவருக்கும் விடுதலைச் சான்று வழங்கினார். மேலும், 4 பேருக்கும் தலா ₹20 ஆயிரம் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்கள் சொந்த தொழில் தொடங்கவும் தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 4 பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர் சரவணன் மீது போலீசில் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்ைக எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: