டாஸ்மாக் கடைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த ஊழியர்களிடம் கட்டாய வசூல்

ஈரோடு, பிப். 21:   டாஸ்மாக் கடைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த  ஊழியர்களிடம் அதிகாரிகள் கட்டாய வசூல் செய்வதாக சிஐடியு., புகார் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடைகளின் கட்டிடங்களின் தன்மை குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டது. இதன்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கட்டாயம் கான்கிரீட் கட்டிடமாக இருக்க வேண்டும். கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி அமைப்புகளில் கட்டிடத்திற்கான அனுமதி பெற்றிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கோர்ட் உத்தரவின் படி கடைகள் அமைப்பதற்காக குறிப்பாக கான்கிரீட் மற்றும் கழிப்பறை வசதிகள் அமைப்பதற்காக கடையில் பணியாற்றும் ஊழியர்களிடம் மேற்பார்வையாளர்கள் கட்டாய வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

  இது குறித்து ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சிஐடியு) நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோர்ட் உத்தரவுப்படி கடைகள் அமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையினரும் மேற்கொள்ள வேண்டும். ஆனால் கடைகளில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்களை கட்டாயப்படுத்துவது, குறிப்பாக கான்கிரீட் மேற்கூரை அமைக்கவும், கழிப்பறைகள் அமைக்கவும் ஊழியர்களிடம் மேற்பார்வையாளர்கள் கட்டாய வசூல் கேட்டு மிரட்டுகின்றனர். மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளின் உத்தரவுப்படி தான் இந்த வசூல் வேட்டை நடப்பதாகவும் மேற்பார்வையாளர்கள் கூறுகின்றனர்.  இது தவறான நடவடிக்கையாகும். இது தொடர்பாக மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம் சிஐடியு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்

Related Stories: