மினி வேன்களில் தொடரும் ஆபத்தான பயணம்

ராமநாதபுரம், பிப். 21: தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து கிராம மக்கள் மினிவேன்களில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த விதி மீறல்களை போலீசார் கண்டுகொள்ளாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராம பகுதியில் நடக்கும் பல்வேறு விழாக்கள், பணிகளுக்கு மினிவேன்கள், சரக்கு மற்றும் டிராக்டர் வாகனங்களையே கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சரக்கு ஏற்றும் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியபிறகு அதிவேகமாக தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்வதால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது. பலமுறை இதுபோன்ற வாகனங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி நேர்ந்துள்ளது. அதிக வேகத்தை கட்டுப்படுத்த ஹைவே போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் விபத்துக்கள் இன்னும் குறையாமல் உயிர்பலி அதிகரித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போலீசார் தலையிட்டு, சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றும் வாகன ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் கூறுகையில், ‘போலீசார் கண்டு கொள்ளாததால் பயமில்லாமல் வாகன ஓட்டுநர்கள் மினிலாரி, டிராக்டர், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். போலீசார் பிடித்தாலும் தேவையானதை பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் ஓட்டுநர்களை விட்டு விடுகின்றனர். இதனால் விபத்துக்கள் குறைவில்லாமல் நடந்து வருகிறது. விபத்துக்களை தடுக்க ஹைவே, டிராபிக் போலீசார் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லும் ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். போலீசார் தரப்பில் கேட்டபோது, ‘சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும் பல டிரைவர்கள் தொடர்ந்து ஆட்களை ஏற்றி வருகின்றனர். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. உயிர்பலி ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட வாகன டிரைவர் மீதே வழக்குப்பதிவு செய்கிறோம். பிரச்னைகளை தடுக்க டிரைவர்கள் இதுபோன்ற சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்ற கூடாது’ என்றனர்.

Related Stories: