தரமற்ற தார்ச்சாலை எங்களுக்கு வேணாம் பணிகளை நிறுத்தி மக்கள் வாக்குவாதம்

குஜிலியம்பாறை, பிப். 21: குஜிலியம்பாறை அருகே தரமற்ற முறையில் தார்ச்சாலை அமைப்பதாக கூறி பணிகளை நிறுத்தி கிராமமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.கோம்பையில் இருந்து கரையானூர் வரை செல்லும் தார்ச்சாலை குண்டும், குழியுமாக இருந்தது. இதனால் இவ்வழித்தடத்தில் உள்ள பாரதிநகர், அண்ணாவிநகர், தாதனூர், கரையானூர் கிராமங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்கு கடும் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஒருவழியாக ஏற்று 1.700 மீட்டர் தொலைவு உள்ள இந்த ஊராட்சி சாலையில் புதிய தார்சாலை அமைக்க ஒன்றிய நிதியில் ரூ.34 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று கரையானூரில் இருந்து தார்சாலை அமைக்கும் பணி நடந்தது.

அப்போது தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்ததாக தெரிகிறது. இதையறிந்த பாரதிநகர் பகுதி மக்கள் திரண்டு வந்து தரமற்ற தார்ச்சாலை போடப்படுவதாக கூறி பணியை தடுத்து நிறுத்தினர். இதனால் பணியாளர்களுக்கும், கிராமமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்ததும் ஒன்றிய பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், பாலன் வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தரமான தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து கிராமமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து ஆர்.கோம்பை முன்னாள் வார்டு கவுன்சிலர் தர்மர் கூறுகையில், இவ்வழித்தடத்தில் அமைக்கப்படும் தார்ச்சாலை பணி மிகவும் தரமற்றதாக உள்ளது. தார்சாலைக்கான மெட்டல் அமைக்கும் பணியின் போதே, ஒன்றிய அதிகாரிகள் யாரும் நேரடியாக பார்வையிட வரவில்லை. இதை ஒப்பந்தக்காரர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இதனால் அரசு பணம் முற்றிலும் விரயமாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related Stories: