உறையூர் நாச்சியார் கோயில் தெப்பத்திருவிழா 24ம் தேதி துவக்கம்

திருச்சி, பிப். 20:  உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் தெப்பத்திருவிழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. மார்ச் 2ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது.வைணவ திருத்தலங்களில் 108ல் இரண்டாவது திருத்தலமாக விளங்குவது உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயில் ஆகும். இந்த கோயில் நிகளாபுரி, கோழியூர் என அழைக்கப்படுவதுடன் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்ய பெற்ற திருத்தலமாகவும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்கி வருகிறது.

மேலும் ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உபகோயிலாகவும் உள்ள கமலவல்லி நாச்சியார் கோயிலில் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை தெப்பத்திருநாள் நடக்கிறது.

 தெப்பத்திருநாளில் மார்ச் 1ம் தேதி இரவு 7 மணிக்கு கமலவல்லி தாயார் தெப்பம் கண்டருளும் நிகழ்ச்சியும், 2ம் தேதி இரவு 8 மணிக்கு பந்தக்காட்சி (ஆளும் பல்லக்கு) திருவீதி புறப்பாடும் நடக்கிறது. முன்னதாக விழா துவங்கும் நாளான வரும் 24ம் தேதி  முதல் 28ம் தேதி வரை தாயார் மாலை 6.15 மணிக்கு மூலஸ்தனத்தில் இருந்து புறப்பட்டு 6.30 மணிக்கு தெப்ப மண்டபம் சேருகிறார்.

இரவு 7.45 மணிமுதல் 8.15 மணிவரை பொது ஜனசேவை நடக்கிறது. அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

 மார்ச் 1ம் தேதி தெப்பத்திருநாள் அன்று மாலை 5 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு 5.15 தெப்ப மண்டபம் சென்றடைகிறார். மாலை 6.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்படுகிறார். இரவு 7மணி முதல் 8மணி வரை தாயார் தெப்பம் கண்டருளுகிறார். பின், 8.15 மணிக்கு தெப்பத்தில் இருந்து புறப்பட்டு தெப்ப மண்டபம் சென்றடைகிறார். இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் புறப்பட்டு திருவீதி வலம் வந்து மீண்டும் இரவு 9.45 மணிக்கு தெப்ப மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து இரவு 10 மணிக்கு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். மறுநாள் 2ம் தேதி பந்தக்காட்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் ரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: