புள்ளம்பாடியில் 2 ஆண்டாக பழுதடைந்த கோயில் திருமண மண்டபம் தனியார் மண்டபங்களை மக்கள் தேடும் அவலம்

லால்குடி, பிப்.20: லால்குடியை அடுத்த புள்ளம்பாடியில் சிதம்பரேஸ்வரர் கோயில் திருமண  மண்டபம் 2 வருடமாக பழுதடைந்துள்ளதால் அதனை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லால்குடியை அடுத்த புள்ளம்பாடி  சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம் 2000ம் ஆண்டு  பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திமுக ஆட்சியில் கட்டி முடிக்கப்பட்டு  திறப்புவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும்  வகையில் மிக குறைந்த கட்டடணத்தில் புள்ளம்பாடியை சுற்றியுள்ள குமுழூர்,  பெருவளநல்லூர், கண்ணாக்குடி, வெள்ளனூர், இருதயபுரம், ஆலம்பாக்கம்,  கோவாண்டாக்குறிச்சி, ஆலம்பாடி, விரகாலூர், திண்ணக்குளம், மேட்டுத்தெரு,  கல்லக்குடி, பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு  முன்பு, சிதம்பரேஸ்வரர் திருமண மண்டபம் பழுதடைந்ததால்  சீரமைக்கப்பட வேண்டும் என எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்துவது  நிறுத்தப்பட்டது. இரண்டு ஆண்டாகியும் அறநிலையத்துறை அதிகாரிகள் திருமண  மண்டபத்தை சீரமைக்க ஒவ்வொரு துறை அதிகாரிகளும் பார்வையிட்டு சென்ற வண்ணம்  உள்ளனர். இது நாள் வரை கோயில் துறை அதிகாரிகள் திருமண மண்டபத்தை  கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இதனால்  புள்ளம்பாடியை சுற்றியுள்ள ஏழை, எளிய மக்கள் தனியார் திருமண மண்டபங்களை அதிக  கட்டணம் கொடுத்து நிகழ்ச்சிகளை நடத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும்  திருமண மண்டபத்தை சுற்றியுள்ள 10 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயிலுக்கு  சொந்தமான நிலங்களில் கருவேல மரங்கள் முளைத்து முற்புதர்களாக காணப்படுவதால்  அந்த பகுதி மக்கள் மண்டபம் அமைந்துள்ள பகுதிக்கு செல்ல முடியாமல்  அச்சத்தில் உள்ளனர். எனவே கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கருவேல  மரங்களை அகற்றி விரைவில் திருமண மண்டபத்தை சீரமைத்து பொதுமக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்  என எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

இது குறித்து அக்கோயில் கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறை அதிகாரியிடம்  கேட்டபோது திருமண மண்டபம் கட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உயர்  அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமண மண்டபம் கட்ட  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினர்.

Related Stories: