தஞ்சை பழைய, திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியில் 80 ஆண்டாக கடை வைத்திருப்போர் வாழ்வாதாரம் கேள்விக்குறி  ஸ்மார்ட் சிட்டி பணிகள் தீவிரம் 91 கடைகள் விரைவில் இடிப்பு வியாபாரிகள் எதிர்ப்பு

தஞ்சை, பிப். 20: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள 91 கடைகளை இடித்து ரூ.30 கோடியில் நவீன வடிவமைப்பிலான கடைகள் கட்டும் பணி துவங்கப்படவுள்ளது. ஆனால் இந்த திட்டத்தால் 80 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தஞ்சை ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு அதற்காக ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரிய கோயிலை மையமாக வைத்து 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு டிஜிட்டல் பலகை, நவீன வடிவமைப்பிலான கட்டிடங்கள், தஞ்சையின் பெருமையை உணர்த்தும் வகையிலான சிற்பங்கள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக பெரிய கோயிலை சுற்றியுள்ள அகழியில் உள்ள வீடுகள் இடிக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட், திருவையாறு பஸ்ஸ்டாண்ட், திருவள்ளுவர் வணிக வளாகம் இடிக்கப்பட்டு மல்டிபிளக்ஸ் வணிக வளாகம், தியேட்டர்கள், கார் நிறுத்துமிடம் கட்டப்படவுள்ளது. இதில் முதல்கட்டமாக தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட், திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள 91 கடைகளை இடிக்கவுள்ளது. இதன்பின்னர் பழைய பஸ்ஸ்டாண்டில் மல்டிபிளக்ஸ் வணிக வளாகம் கட்டப்பட்டு அதை சுற்றி இரண்டு பகுதிகளிலும் பஸ்கள் நிறுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள திருவையாறு பஸ்ஸ்டாண்டை சுற்றியுள்ள கடைகளை இடித்துவிட்டு டிஜிட்டல் கார் பார்க்கிங் அதன் மேல்பகுதியில் கடைகள் கட்டவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள கடைகளின் கட்டிடங்கள் எல்லாம் 80 ஆண்டுகளை கடந்துவிட்டது. இதனால் இந்த கட்டிடங்களை இடித்து தள்ளிவிட்டு நவீன வடிவமைப்பிலான கட்டிடங்களை கட்டி வாடகைக்குவிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான நவீன பொழிவுகளை ஏற்படுத்த வேண்டும். அந்தளவுக்கு நவீன வடிவமைப்புகளை கொண்டு இந்த பகுதி உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் கடைகளை வைத்து தலைமுறை தலைமுறையாக பிழைப்பை நடத்தி வருவோர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதுகுறித்து அந்த பகுதியில் கடைகள் வைத்திருப்பவர்கள் சிலர் கூறியதாது: ஆனந்த்: தஞ்சை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தஞ்சை நகரின் பழமையை மாற்ற முயற்சி செய்வதை ஏற்க முடியாது. தஞ்சை நகரத்துக்கு என்று ஒரு வடிவமைப்பு உள்ளது. பெரிய கோயிலை சுற்றி அகழிகள் உள்ளது. மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த அகழி எப்படி இருந்ததோ அதுபோல் அகழியின் தண்ணீர் விட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி விடப்போவதாக தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு பழமையை பாதுகாப்பதாக கூறும் மாவட்ட நிர்வாகம், கடைகளை மட்டும் இடித்து தள்ள திட்டம் வகுப்பது ஏன். இந்த கடைகளை இடித்தால் இங்கு கடைகள் வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும். இதற்கு மாற்று ஏற்பாடு என்ன செய்யப்பட்டுள்ளது. தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்ட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 51 கடைகள் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட கடைகள் எல்லாம் ஆளும்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதுவரை அந்த கடை பூட்டியே உள்ளது. பழைய பஸ்ஸ்டாண்டில் கடைகள் வைத்திருப்பவர்களை அழைத்து பேசி அந்த கடைகளை கொடுத்திருக்கலாம். ஆனால் எதையுமே செய்யாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி வந்து விட்டது. பணிகளை துவங்காவிட்டால் நிதி திரும்ப சென்றுவிடும். எனவே பணிகளை துவங்குவதை தவிர வேறு வழியில்லை என்று கூறுவது வியாபாரிகள் வயிற்றில் அடிப்பது போல் உள்ளது.

தஞ்சை பெரிய கோயிலை சுற்றி தான் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மேற்கொள்ள வேண்டுமா. தஞ்சை புறநகர் பகுதியில் திட்டங்களை கொண்டு சென்றால் அங்கு நிறைய கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உருவாகும். தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட், திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியை சுற்றியுள்ள கடைகளை இடித்து விட்டு திட்ட பணிகளை நிறைவேற்றியே தீருவோம் என்று மாநகராட்சி முடிவு செய்தால் இந்த பகுதியில் கடைகளை வைத்து கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பிழைப்பை நடத்தி வருவோர் குடும்பத்தை சேர்ந்த தலா ஒருவருக்கு அரசு வேலையை கொடுத்துவிட்டு கடைகளை இடித்து தள்ளிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தாராளமாக செயல்படுத்தலாம் என்றார்.கமலநாதன்: தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட், திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியில் 91 கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் மாதம் ஒன்றுக்கு மாநகராட்சிக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. கடைகளில் பழுது ஏற்பட்டால் எல்லாவற்றையும் கடைகளை வைத்திருப்பவர்களே சீர் செய்து கொள்கிறோம்.

ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தால் அந்த வீட்டில் பழுது ஏற்படும்போது வீட்டின் உரிமையாளர் தான் சீர் செய்து தருவார். ஆனால் பல ஆண்டுகள் பிழைப்பை நடத்தி வரும் கடைகளை இடித்துவிட்டால் எங்கள் வாழ்வாதாரம் என்னவாகும். தற்போது 91 கடைகள் உள்ளது. ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 51 கடைகள் தான் கட்டப்படவுள்ளது. எஞ்சியுள்ளவர்கள் நிலைமை என்னவாகும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நகர பகுதியில் புகுத்துவதை விட தஞ்சை புறநகர் பகுதியில் கொண்டு செல்வது எளிது. நகர பகுதியில் வாகனங்கள் வராமல் இருக்க எப்படி புறநகர் பகுதியில் சாலைகள் போடப்படுகிறது. அதுபோல் புறநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு சென்றால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வரவேற்பர்.வளர்ந்த நகர் பகுதியில் உள்ள எல்லாவற்றையும் இடித்து தள்ளி சின்னாபின்னமாக மாற்றுவதை விட இல்லாத இடத்தில் திட்டத்தை கொண்டு சென்றால் அந்த பகுதி வளர்ச்சி பெறும் என்றார்.

ஏற்று கொள்ள முடியாது...

தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் திருவையாறு பஸ்ஸ்டாண்ட் பகுதியில் உள்ள 91 கடைகளை இடிப்பதற்கு முன் தஞ்சை நகர பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்து கொடுங்கள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கடைகளை கட்டிய பின்னர் ஏற்கனவே இந்த பகுதியில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கே கடைகள் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தஞ்சை மாநகர பகுதி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்பட்டுள்ளது, எனவே அதற்கேற்ப இந்த பகுதியில் கடைகள் வடிவமைப்பு இருக்க வேண்டும், அந்த வடிவமைப்பை இத்தனை மாதங்களுக்குள் செய்து கொடுக்க வேண்டுமென கடையின் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிடலாம். அதன்படி கடையின் உரிமையாளர் சொந்த செலவில் வடிவமைத்து கொள்வார். இதையெல்லாம் விட்டு கடைகளை இடிப்போம், 80 ஆண்டுகளுக்கு முன் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடை பெற்றவர்களுக்கு தான் கடைகள் கொடுப்போம் என்று கூறுவதெல்லாம் ஏற்று கொள்ள முடியாது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: