திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் மாசி மக தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

அரியலூர், பிப்.20: திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில் மாசிமக தேரோட்டம் நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

 அரியலூர் மாவட்டம், திருமழபாடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில், தமிழ்நாடு சுற்றுலா தலங்களில் ஒன்றானதும், அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்றதும், மேலும் நந்திஎம்பெருமான் திருக்கல்யாணம் நடைபெறும் முக்கியஸ்தலங்களில் முதன்மையானதாகும்.சுமார் 1600ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவாலயமான இக்கோயிலில்  வருடா, வருடம் மாசிமக தேரோட்டம் சிறப்பாக நடைபெறும், அதேபோல். இந்த ஆண்டும் மாசிமகப் பெருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் சுவாமிகள் ஆதிசேஷ வாகனம், பூத வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா செல்லும். மேலும் சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

பின்னர் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு  நேற்றுமுன்தினம்  காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு மேல் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தேரின் முன்பு திருமழபாடி, தஞ்சை மாவட்டம் புனல்வாசல், வைத்தியநாதன் பேட்டை உள்ளிட்ட  கிராம முக்கியஸ்தர்கள்,  தமிழக அரசின் தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், எஸ்பி  ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு  அரசு துறை அதிகாரிகள்  தேரைவடம்  பிடித்து இழுத்தனர்.  விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன்,  அம்பாள், மற்றும் சண்டிகேஷ்வரர் ஆகிய தெய்வங்கள் சிறிய தேரில் எழுந்தருளினர். மாசிமகப் பெருவிழாவில், வாணவேடிக்கையுடன் நாதஸ்வர இன்னிசை முழங்க திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் அரியலூர், தஞ்சை, பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: