சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மறியல்: நெமிலி கிராமத்தில் பரபரப்பு

திருத்தணி, பிப். 19: திருவாலங்காடு ஒன்றியம் நெமிலி கிராம மக்கள், சீராக குடிநீர் வழங்கவும், முறையாக அரசு பஸ் இயக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட நெமிலி ஊராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆழ்துளை கிணறுகள் மூலம்  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.சமீபகாலமாக இந்த ஆழ்துளை கிணறுகளில் தண்ணீரின்றி வறண்டு போனதால், கடந்த சில மாதங்களாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும், இப்பகுதிகளுக்கு அரசு பேருந்துகளும்  முறையாக இயக்கப்படுவதில்லை. இவற்றை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை கிராம மக்கள் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், ஊராட்சி மற்றும் போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து, திருத்தணி-நாகலாபுரம் சாலையில் உள்ள நெமிலி பேருந்து நிறுத்தம் அருகே  நேற்று காலை 9 மணியளவில் பெண்கள் உட்பட  100க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து தடைபட்டது.இதுகுறித்து தகவலறிந்ததும் திருவாலங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் தங்களது பகுதிக்கு உடனடியாக குடிநீர்  வசதி செய்து தரவும், அரசு பேருந்துகளை தொடர்ச்சியாக இயக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி, பிரச்னையை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிக்கு தற்காலிகமாக  டிராக்டர் மூலம் குடிநீர் சப்ளை செய்கிறோம் என அதிகாரிகள் உறுதி கூறினர்.  அதிகாரிகளின் உறுதியை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: