விவசாயிகளுக்கு நீரா பானம் இறக்குவதற்கான நிபந்தனையை தளர்த்த வேண்டும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

நாமக்கல், பிப்.15: விவசாயிகளுக்கு நீரா பானம் இறக்க விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்த்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட காவிரி நீரேற்று பாசனதாரர்கள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழக முதல்வருக்கு  அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் தென்னை விவசாயிகளுக்கு நீரா பானம் இறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீரா பானம் இறக்க பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. பெரும்பாலான விவசாயிகள், தங்களுடைய மரங்களிலிருந்து நீரா பானம் இறக்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நீரா பானம் இறக்குவதற்கான விதியை தளர்த்த வேண்டும். அதாவது ஒரு விவசாயி 5 மரங்களில் இருந்து மட்டும் நீரா பானம் இறக்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றி, ஒரு விவசாயி தன் தோட்டத்தில் பயிரிட்டுள்ள எத்தனை மரங்களுக்கு வேண்டுமானாலும் நீரா பானம் இறக்க அனுமதிக்க வேண்டும். மறைந்த எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது, தென்னை விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது, விவசாயி எந்த ஒரு பயிர் செய்தாலும் தொடர் நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், நீரா பானம் இறக்கும்போது, விவசாயிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும். எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கவும், அரசாங்கத்தின் வருவாயை பெருக்கவும் விவசாயிகள் யார் வேண்டுமானாலும் நீரா பானம் இறக்கிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: