7வது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளம் கோரி பிடிஓ அலுவலகம் முன் சிஐடியு காத்திருப்பு போராட்டம்

7வது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளம் கோரி

பிடிஓ அலுவலகம் முன்

சிஐடியு காத்திருப்பு போராட்டம்

ஊத்துக்கோட்டை, பிப்.15: எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 53 ஊராட்சிகள் உள்ளன. இதில் பணிபுரியும் பம்ப் ஆபரேட்டர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு 7வது ஊதியக்குழு நிர்ணயித்த அடிப்படையில் சம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்கிட கோரி பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் பிடிஓ அலுவலகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில்  காத்திருக்கும் போராட்டம் நேற்று நடந்தது.இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர்கள் குடியரசு, வெங்கடேசன், மணிவண்ணன், துணைச்செயலாளர்கள் பஞ்சாட்சரம், லவக்குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சி ஊழியர் சங்க மாநில நிர்வாகி கிருஷ்ணசாமி, உள்ளாட்சி மாவட்ட செயலாளர் சந்தானம், முன்னாள் கவுன்சிலர்கள் சம்பத், கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், 7வது ஊதியக்குழு நிர்ணயித்த சம்பளம் மற்றும் அரியர்சை 11.10.2017 முதல் வழங்க வேண்டும், 10.5.2000க்கு பிறகு பணியில் சேர்ந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு 11.10.2017 முதல் 3800 மாத சம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்க வேண்டும், கிராம ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மை காவலர்களுக்கு பிரதி மாதம் 5ம் தேதிக்குள் சம்பளம் மற்றும் சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இதுபற்றி அறிந்ததும் பிடிஓ ஷேக் சதகத்துல்லா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தூய்மை பணியாளர்களுக்கு நாளைக்குள் (இன்று), பம்ப் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இம்மாத இறுதிக்குள் சம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்குவதாக உறுதியளித்தார்.  இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பெரியபாளையம் பிடிஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: