பேராவூரணியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் விதி மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

பேராவூரணி,பிப்.13: பேராவூரணி பேரூராட்சிக்கு சொந்தமான மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட், கடை வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகளை பறிமுதல் செய்ததோடு, விதி மீறியோருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 14 வகையான ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் கப்புகள், கேரி பைகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடைக்கு பின்னர் பெருமளவு பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது .ஒரு சில கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி உத்தரவின் பேரில், தலைமை எழுத்தர் சிவலிங்கம் தலைமையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சிக்கு சொந்தமான மீன், இறைச்சி மார்க்கெட் மற்றும் கடைவீதியில் உணவகங்கள், பழக்கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு

செய்தனர்.

இதில் சில கடைகளில் தடையை மீறி உணவுப் பொருட்களை பொட்டலம் கட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டு, 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விதியை மீறி பயன்படுத்திய கடைகாரர்களுக்கு  ரூ 12 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியது: கலெக்டர்  மற்றும் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே போல் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை, குடிநீர், சொத்துவரி மற்றும் இதரக் கட்டணங்களை தாமதமின்றி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கடைகளுக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை செலுத்த தவறினால் கடைகள் பூட்டப்பட்டு ஏலம் விடப்படும்

என்றனர்.

Related Stories: