உசிலம்பட்டியில் உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு

உசிலம்பட்டி, பிப். 7: உசிலம்பட்டி பகுதியில் உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவினர் திடீர் ஆய்வு செய்தனர். உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரி கோவிந்தராஜ் தலைமையில் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ முருகேசன் முன்னிலையில் நேற்று உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்தினர். உசிலம்பட்டியிலுள்ள பேரையூர் சாலை, தேனி சாலை, வத்தலக்குண்டு சாலை, பகுதிகளிலுள்ள கறிக்கடை, பிராய்லர்கடை, மீன் கடை, ஓட்டல்கள் மற்றும் தினசரி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடந்தது. இதில் உணவுப்பொருள் சுகாதாரமான முறையில் கலப்படமின்றியும், சுத்தமாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா, என ஆய்வு செய்யப்பட்டது.மாசுபடிந்த சுத்தமில்லா தண்ணீரில் மீண்டும், மீண்டும், கறி, மீன்களை கழுவி சுத்தமில்லாமல் பொதுமக்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. பாலீதீன் பைகள் மறைமுகமாக பயன்படுத்தக்கூடாது. மீறி செயல்படுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என வியாபாரிகளிடம் அதிகாரிகள் எச்சரித்தனர்.ஆய்வில் மண்டல துணை வட்டாட்சியர் ராஜன், உசிலம்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முகம்மதுகபீர், சக்திவேல் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் நகாராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: