பழநி அருகே பிஆர்ஜி பள்ளியில் கிராமோட்சவம் 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

பழநி, பிப். 3: பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் ரேணுகாதேவி கல்வி குழுமங்களான எஸ்ஆர்டி, பிஆர்ஜி, ரிப்ஸ் பள்ளிகள் இணைந்து நேற்று கிராமோட்சவம்- 19 விழா நடந்தது. இயற்கை வேளாண் கண்காட்சி, கிராமிய விளையாட்டுகள், தமிழர்களின் பாரம்பரிய கலைகள், சமச்சீர் உணவு வகைகள், வங்கிகளின் விவசாயக கடன் ஆலோசனை முகாம், விவசாயம் மற்றும் உணவே மருந்தின் மகத்துவம் குறித்த கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், நீர்ப்பாசன முறைகள், கால்நடை பராமரிப்பு, மண்ணில்லா நீர்வழி விவசாயம், இயற்கை அழிவுகளால் அழிந்த மரங்களின் மறுசீரமைப்பு முறை குறித்த ஆலோசனைகள் மற்றும் மறைந்த நெல் ஆராய்ச்சியாளர் நெல் ஜெயராமனால் மீட்டெடுக்கப்பட்ட 150 நெல் வகைகள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கிராம பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்கு எனும் தலைப்பில் மத்திய கயிறு வாரிய செயலர் குமாரராஜா பேசினார். தொடர்ந்து இயற்கையே இறை, மலடான விவசாய மண்ணை வளமாக்குவோம், புதிய விவசாய உத்திகள், உடலே மருத்துவர், இயற்கை உணவு உள்ளிட்ட தலைப்புகளில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டுசென்றனர். பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தாளாளர் ரஞ்சிதம் ராமச்சந்திரன், செயலர் கிரிநாத் ராமச்சந்திரன், பள்ளிக்குழு நிர்வாகிகள் பாபு, பவிதா கிரிநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஏற்பாடுகளை முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: