தென்காசி, பிப்.5: குற்றாலத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் அருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆண்டு தோறும் ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில் இறந்து போன முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், மோட்சம் கிடைக்கவும் குற்றாலம், பாபநாசம் உள்ளிட்ட புண்ணிய தலங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு தை அமாவாசையான நேற்று அதிகாலை 3 மணி முதலே குற்றாலத்தில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குவிந்தனர். அருவிகளில் தண்ணீர் சுமாராக விழுந்தது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் புனிதநீராடினர். பின்னர் அருவிக்கரையில் அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் எள்ளும், தண்ணீரும் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். இதே போல தென்காசி ஆப்பாலம் சிற்றாற்றிலும் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். வி.கே.புரம்: பாபநாசத்தில் தை அமாவாசையை யொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தை அமாவசையை யொட்டி ஆயிரக்கணக்கானோர் பாபநாசம் தாமிரபரணி ஆற்று படித்துறையில் நேற்று அதிகாலை முதலே தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் பாபநாசத்தில் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. தனியார் வாகனங்கள் மற்றும் டூ வீலர்கள் டாணாவில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து 1 கிமீ நடந்தே பாபநாசம் சென்றனர்.