தென்காசி, நவ.5: குற்றாலத்தில் பெய்த பலத்த மழையால் பயணிகள் பாதுகாப்பு கருதி நேற்று மதியம் முதல் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக காலையில் குளிக்க அனுமதிக்கப்படுவதும் மாலையில் தடை விதிக்கப்படுவதுமாக இருந்தது. இந்நிலையில் நேற்று சற்று வித்தியாசமாக காலை வேளையிலேயே மழை பெய்தது. காலை 10 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது.
இதனைத்தொடர்ந்து மதியம் அருவிகளில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி மதியம் முதல் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். பகல் வேளையிலேயே தடை விதிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான தூறலும் இருந்தது. இரவிலும் தொடர்ந்து அருவிகளில் குளிக்க தடை நீடித்தது.
The post மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றால அருவிகளில் குளிக்க தடை appeared first on Dinakaran.