தென்காசி,நவ.8: தென்காசியை அடுத்த ஆய்க்குடி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், இலஞ்சி திருவிலஞ்சிக்குமாரர் கோயில், குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோயில், மேலகரம் செண்பக விநாயகர் கோயில் ஆகிய கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று மாலையில் சூரசம்ஹார விழா வெகு விமர்சையாக நடந்தது. இக்கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் ஒவ்வொரு சமுதாய மண்டகப்படி சார்பில் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. இரவில் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதில் முதலில் யானை முகம், சிங்க முகம், சூரன்முகம் ஒவ்வொன்றாக முருகப்பெருமான் வதம் செய்தார்.
ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பூஜைகளை அர்ச்சகர்கள் சரவணன், பிரபு, நவநீதன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர். விழாவில் ஆய்க்குடி ராமசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், திமுக பேரூர் செயலாளர் சிதம்பரம், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவி வள்ளிமயில், தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கத்தின் மாநிலத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிளங்காடு முன்னாள் ஊராட்சி தலைவர் பேச்சிமுத்து, காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் கிளங்காடு மணி, அகரக்கட்டு கார்வின், அதிமுக ஒன்றிய செயலாளர் செல்லப்பன், பேரூர் செயலாளர் முத்துக்குட்டி மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (8ம் தேதி) இரவு 9 மணிக்கு மேல் சப்தாவர்ணம் நடக்கிறது. இலஞ்சி கோயிலில் பூஜைகளை ரமேஷ் பட்டர், ஹரி பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
செயல் அலுவலர் சுசிலாராணி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் அன்னையாபாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூர் செயலாளர் முத்தையா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, சுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் சண்முகநாதன், சுரேஷ், இசக்கி ரவி, கவுன்சிலர் சுந்தரம், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுந்தரம், கவுன்சிலர் ஜெகன், மயில்வேலன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (8ம் தேதி) மதியம் 12 மணிக்கு மூலவர் முழுக்காப்பு தீபாராதனை நடக்கிறது. இரவில் 7.20 மணிக்கு மேல் 8.20 மணிக்குள் சுவாமி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (9ம் தேதி) இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. 10ம் தேதி காலை 10.40 மணிக்கு மேல் 11.40 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் பூஜைகளை மகேஷ் பட்டர், கணேசன் பட்டர், பிச்சுமணி பட்டர், ஜெயமணி சுந்தரம் பட்டர் நடத்தி வைத்தனர். இதில் உதவி ஆணையர் யக்ஞநாராயணன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் தலைமையில் ஏடிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் செய்திருந்தனர்.
பாவூர்சத்திரம்: வென்னிமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடநத் 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் மதியம் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, தீபாராதனை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதை முன்னிட்டு காலை 10 மணி முதல் 12.30 மணி வரை கும்பஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனையும், மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜையும் நடந்தது. தொடர்ந்து மாலை முருகபெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் கோயில் வளாகத்தில் கோலாகலமாக நடந்தது. விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.
களக்காடு: களக்காட்டில் பிரசித்திப்பெற்ற சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோயிலில் நேற்று முருகப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் வெற்றி வேலுடன் எழுந்தருளி சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார். அவருக்கு முன்பாக சூர பத்மனும் சென்றார். ரதவீதிகள் வழியாக முருகப்பெருமானும், சூரபத்மனும் கோயிலுக்கு வடபுறமுள்ள திடலுக்கு சென்றதும், சூரசம்ஹார நிகழ்ச்சிகள் தொடங்கியது. பின்னர் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின் இரவில் கோயில் ராஜகோபுர மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைதொடர்ந்து முருகப்பெருமான் மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.
விகேபுரம்: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாச சுவாமி கோயிலிலிருந்து நேற்று மதியம் 12 மணிக்கு சூரபத்மன் விகேபுரம் சிவந்தியப்பர் கோயிலுக்கு எதிரே வந்தடைந்தார். மாலை 5.15 மணிக்கு பாபநாசத்திலிருந்து சிவந்தியப்பர் கோயிலுக்கு சுவாமி சுப்பிரமணியர் வந்தடைந்தார். இதையடுத்து சுவாமி சுப்பிரமணியர், சூரனை சம்ஹாரம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விகேபுரம் சிவந்தியப்பர் கோயிலில் சுவாமி சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுப்பிரமணியர் பாபநாசம் கோயில் சென்றடைந்தார். ஏற்பாடுகளை பாபநாசம் கோயில் நிர்வாக அலுவலர் ராஜேந்திரன் செய்திருந்தார்.
சிவகிரி: சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று ஏழாம் திருநாள் மண்டபம் முன்பு சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான் முதலில் யானைமுகம் கொண்ட சூரனையும், பின்னர் சிங்க முகம் கொண்ட சூரனையும், இறுதியில் சூரபத்ம நாதனை வதம் செய்தார். பின்னர் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் தலைமையில் விழா கமிட்டியினர் சிறப்பாகச் செய்தனர்.
The post நெல்லை, தென்காசி மாவட்ட முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம் appeared first on Dinakaran.