உதவித்தொகைக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு அதிகாரிகள் அலைக்கழிப்பு ஜவ்வாது மலைவாழ் மக்கள் புகார் திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, பிப்.5: முதியோர், விதவை உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, திருவண்ணாமலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், ஜவ்வாது மலைவாழ் மக்கள் புகார் மனு அளித்தனர்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர்வு கூட்டம் சப்-கலெக்டர்(பயிற்சி) பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. இதில் திட்ட இயக்குநர் ஜெயசுதா, சமூக  பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் உமாமகேஸ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் விதவை உதவித்ெதாகை, ஓய்வூதியம், சுயஉதவிக்குழு கடனுதவி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 658 மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை சப்-கலெக்டர் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், ஜவ்வாதுமலை ஒன்றியம், பெருங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:எங்கள் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித்தொகை கேட்டு, கடந்த ஆண்டு கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். எங்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி, அப்போதைய விஏஓ, தாசில்தார் ₹3 ஆயிரம் வரை லஞ்சமாக பெற்றுக்கொண்டனர். ஆனால், இதுவரையில் உதவித்தொகை பெற்றுத்தராமல் அலைக்கழித்து வருகின்றனர். எந்த வருமானமும் இன்றி மிகவும் வறுமையில் இருந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு உதவித்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.ஜவ்வாதுமலை ஒன்றியம், நம்பியம்பட்டு ஊராட்சியில் டேங் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வரும் ஊழியர்கள், தங்களுக்கு கடந்த ஆண்டு ₹4,600 ஊதியம் உயர்வு அறிவிக்கப்பட்டு, இதுவரை  பழைய ஊதிய தொகையான ₹2,600 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே, உயர்த்தப்பட்ட ஊதியம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.கலசபாக்கம் அடுத்த சேங்கபுத்தேரி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா தனது 3 குழந்தைகளுடன் வந்து, தனது கணவர் இறந்துவிட்டதால் மிகவும் வறுமையில் இருந்து வரும் தனக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்க வேண்டும் என மனு அளித்தார்.வந்தவாசி பகுதியை சேர்ந்த உபாகரம் என்ற பெண், தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டக்கூடாது என தடுத்து நிறுத்திய விஏஓ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தார்.குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அந்தந்த துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சப்-கலெக்டர் பிரதாப் (பயிற்சி)  தெரிவித்தார்.

Related Stories: