மகளிர் விடுதிகளுக்குஒற்றை சாளர முறையில் உரிமம் வழங்க வேண்டும்

மதுரை, ஜன. 29: மகளிர் விடுதிகள் உரிமம் பெற ஒற்றை சாளர முறையில் அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.தமிழ்நாடு விடுதி உரிமையாளகள் நலச் சங்கம் சார்பில் நிறுவன தலைவர் ஷோபனா மாதவன் தலைமையில் நிர்வாகிகள் மதுரை கலெக்டர் நடராஜனிடம் நேற்று கோரிக்கை மனு வழங்கினர். இதில், ‘விடுதி உரிமம் பெறுவது சம்பந்தமாக தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்பிரிவின் கீழ் உரிமம் வழங்க வேண்டும். சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி விடுதி உரிமையாளர்களை அழைத்து கலெக்டர் கலந்தாய்வு கூட்டம் நடத்த வேண்டும்.விடுதிக்கான உரிமம் வழங்குவதில் அரசின் பல்வேறு துறைகளுக்கு சென்றுவருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், சம்பந்தப்பட்ட துறைகள் இணைந்து ஓற்றைச் சாளர முறையில், விண்ணப்பங்களை பெற்று உரிமம் வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உரிமம் வழங்குவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறையினரிடம் உரிமம் பெற அதனை அவர்கள் விரைவாக வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.

Related Stories: