ஜன.27ல் கும்பாபிஷேகம் கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை

கன்னியாகுமரி, ஜன.22:  கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று கொடிமரம் பிரதிஷ்டை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று தொடங்குகின்றன.கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் ₹22.50 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இக் கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நேற்று கொடிமரம் நிறுவும் பணி நடந்தது.கோயில் முன்பு 40 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்காக நேற்று காலை 9 மணிமுதல் 10.30க்குள் விஷேச பூஜைகள் நடந்தன. கொடிமரம் அமையும் இடத்தில் அபிஷேகம் நடந்தது. கொடிமரத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. கொடிமரம் பீடத்தில் நவதானியங்கள், தங்கம் உள்ளிட்டவை வைக்கப்பட்டன. பின்னர் கிரேன் உதவியுடன் கொடிமரம் நிறுவப்பட்டது.

நிகழ்ச்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் ஆலோசனை மற்றும் தகவல் மைய உதவி செயல் அலுவலர் ரவி, சிறப்பு அதிகாரி முனிரத்தினம், சென்னை ஆலோசனை மைய உறுப்பினர்கள் மோகன்ராவ், சந்திரசேகர், விவேகானந்த கேந்திரா துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஹனுமந்த ராவ் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இன்று (22ம் தேதி) மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. இந்த பூஜைகள் தொடந்து 5 நாட்கள் நடக்கிறது. 27 ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வெங்கடாஜலபதி கோயிலுக்கு செல்வதற்காக கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுக சாலையில் ஒற்றையால்விளை பகுதியில் இருந்து புதிதாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த வழியாக செல்ல வேண்டும். கோயிலில் யாகசாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் கோயிலை அலங்கரிக்கும் பணி, கோயிலை சுற்றிலும் மின்விளக்கு அலங்காரம் உள்ளிட்டவை நடந்து வருகிறது.

Related Stories: