நாட்றம்பள்ளி உட்பட சுற்றுப்பகுதிகளில் போலி டாக்டர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள்

நாட்றம்பள்ளி, ஜன.22: நாட்றம்பள்ளி உட்பட சுற்றுப்பகுதிகளில் நடமாடும் போலி டாக்டர்கள் பெருகி வருகின்றனர். எனவே அவர்களை தடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பச்சூர், வெலக்கல்நத்தம், புதுப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 10, 12ம் வகுப்பு மட்டுமே முடித்தவர்கள் தங்களை ஆர்எம்பி மருத்துவர்கள் எனக் கூறிக்கொண்டு அலோபதி மருத்துவம் செய்து வருகின்றனர்.

போலி மருத்துவர்கள் என தெரியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் அவர்களிடம் மருத்துவம் பார்த்து செல்கின்றனர். அப்போது போலி மருத்துவர்கள் நோய்க்குரிய மருந்து, மாத்திரை ஊசி போடுவதாக கூறி தவறான மருந்துகளை அளிக்கின்றனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு புதிய நோய்களுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மாற்று மருத்துவம் பார்க்க வேறு மருத்துவரை தேடிச் செல்கின்றனர். இதனை பயன்படுத்திக்கொண்டு 10, 12ம் வகுப்பு முடித்தவர்கள் தங்களை ஆங்கில மருத்துவர்கள் எனக்கூறிக்கொண்டு பாதிக்கப்பட்டோரின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்துவருகின்றனர்.

இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘போலி ஆர்எம்பி மருத்துவர்கள் ஊசி போட்ட இடத்தில் கட்டி போல் உடல் வீங்குகிறது. இதனால் உடல்நிலை அடிக்கடி பாதிக்கிறது. இந்த டாக்டர்கள் குறைந்த கட்டணம் வசூலிப்பதாலும் சில நோய்கள் உடனடியாக குணமாவதாலும் அவர்களிடம் மருத்துவம் பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் இவர்கள் போலி டாக்டர்கள் என எங்களுக்கு தெரியாது. எனவே, போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: