கையகப்படுத்திய இடத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரி மரத்தில் ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபர்

வேலூர், ஜன. 22: கையகப்படுத்திய இடத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்த வாலிபர் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மரத்தில் ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. மதியம் 1.30 மணியளவில் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு வாலிபர் அங்குள்ள மரத்தில் திடீரென ஏறினார். மரத்தில் இருந்தபடி தான் வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர், ‘யாராவது என்னை மீட்க முயன்றால் கீழே குதித்துவிடுவேன்’ என்று மிரட்டல் விடுத்தார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ கோவிந்தராஜ் உடனடியாக மரத்தில் ஏறி அந்த வாலிபரிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே மீட்க முயன்றார். இதைப் பார்த்த அந்த வாலிபர் சர, சரவென மரத்தின் உச்சிக்கு சென்றார். இதனால் அந்த வாலிபர் கீழே குதித்து விடலாம் என்று கருதி எஸ்ஐ கோவிந்தராஜ் கீழே இறங்கி விட்டார்.

இதையடுத்து அங்கிருந்த அந்த வாலிபரின் உறவினர் ஒருவர் மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபரை தடுத்து நிறுத்தினார். அதற்குள் மறுபுறம் மரத்தில் ஏறிய தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரின் இடுப்பில் கயிற்றை கட்டி மரத்தில் இருந்து கீழே இறக்கி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து அங்கிருந்த போலீசார் தற்கொலைக்கு முயன்ற வாலிபருடன் வந்த அவரது உறவினர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரின் பெயர் நூருல்லா(37) என்றும், ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அப்போது அங்கிருந்த தற்கொலைக்கு முயன்ற நூருல்லாவின் தாயார் போலீசாரிடம் கூறும்போது, ‘ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக 7 ஏக்கர் நிலம் இருந்தது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தீ விபத்தில் நிலத்தின் பட்டா எரிந்து விட்டது.

இதையடுத்து எங்களுக்கு சொந்தமான நிலத்தில் அரசு அலுவலகம் மற்றும் அரசு அரிசி குடோன் கட்டப்பட்டுள்ளது. இதுபற்றி கடந்த 8 ஆண்டுகளாக மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்கள் குடும்பத்தில் சிலருக்கு மட்டும் 3 சென்ட் நிலத்தை வீடு கட்ட அனுமதித்துள்ளனர். ஆனால், மற்றவர்களுக்கு நிலம் வழங்கவில்லை. எங்களுக்கு நிலத்தை வழங்க வேண்டும்’ என்றார்.

போலீசாரின் விசாரணையை தொடர்ந்து அவர்களிடம் கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி, நூருல்லாவின் தாயாரிடம், ‘நூருல்லா மருத்துவமனையில் இருந்து திரும்பியதும் உங்கள் பிரச்னை குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: